மலேஷிய சிவப்பு காது ஆமைகள்; சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
மலேஷிய சிவப்பு காது ஆமைகள்; சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : டிச 05, 2024 11:50 PM

சென்னை : மலேஷியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 5,200 சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த விமான பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையில் இருந்து இருவர், சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று திரும்பியது தெரியவந்தது.
இருவர் மீதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் எடுத்து வந்திருந்த, 11 அட்டை பெட்டிகளை பிரித்து சோதனை செய்தனர்.
அவற்றில், 5,193 சிவப்பு காது ஆமைகள் உயிருடன் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், அந்த ஆமைகள் வந்த விமானத்திலேயே மலேஷியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப் பட்டன.
கடத்தலில் ஈடுபட்ட தமிழக பயணியர் இருவரையும் கைது செய்து, சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.