'கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க' வைகோவுக்கு மல்லை சத்யா 'அட்வைஸ்'
'கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க' வைகோவுக்கு மல்லை சத்யா 'அட்வைஸ்'
ADDED : ஆக 03, 2025 03:38 AM

சென்னை: “கடந்த 2001, 2006 சட்டசபை தேர்தல்களைப் போல, வரும் தேர்தலின்போது கடைசி நேரத்தில், தி.மு.க., கூட்டணியிலிருந்து ஓடிவிடக்கூடாது,” என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்தார்.
வைகோவின் மகனும், ம.தி.மு.க., முதன்மைச் செயலருமான துரை உடன் ஏற்பட்ட மோதலால், கட்சிப் பணிகளில் இருந்து சத்யா ஒதுங்கியுள்ளார். இந்நிலையில், துரோகி என வைகோ குற்றஞ்சாட்டியதால் கொந்தளித்த மல்லை சத்யா, வைகோவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.
இச்சூழலில் யார் துரோகி எனக்கேட்டு, சென்னை, சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், மல்லை சத்யா நேற்று உண்ணாவிரதம் இருந்தார். இதில், நுாற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த, 28 ஆண்டுகளாக ஜனநாயகவாதியாக இருந்த வைகோ, மகன் வந்ததும் மறுமலர்ச்சி தி.மு.க.,வை, 'மகன் தி.மு.க.,' என மாற்றி விட்டார். கட்சி துவக்கப்பட்ட காலத்திலிருந்து உழைத்தவர்களுக்கு, எந்த மரியாதையும் இல்லை. மகனுக்காக என்னை துரோகி என, வைகோ கூறியுள்ளார். இதற்கு நீதி கேட்டு தான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, வைகோ கூறி வருகிறார்.
கடைசி வரை, அவர் அதில் உறுதியாக இருக்க வேண்டும். கடந்த 2001, 2006 சட்டசபை தேர்தல்களின்போது, தி.மு.க., கூட்டணியிலிருந்து, கடைசி நேரத்தில் ஓடியதை இன்றும் யாரும் மறக்கவில்லை. அதுபோல, வரும் 2026 சட்டசபை தேர்தலின்போது ஓடிவிடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.