ADDED : நவ 21, 2025 03:06 AM

சென்னை: ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கியுள்ளார்.
ம.தி.மு.க., துணை பொதுச்செயலராக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை நேற்று துவக்கினார்.
விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் பெயர் போலவே, இந்த புதிய கட்சியின் பெயரும் அமைந்துள்ளது.
சென்னையில் நேற்று நடந்த விழாவில், தி.வெ.க., கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா, இணை ஒருங்கிணைப்பாளராக கராத்தே பழனிசாமி, முதன்மை செயலராக வல்லம் பசீர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், 'நாங்கள் குற்றஞ்சாட்டுகிறோம், யார் துரோகி' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. பகுஜன் திராவிட கட்சி தேசிய தலைவர் சர்தார் ஜீவன் சிங்கிற்கு, 'திராவிட ரத்னா' விருது வழங்கப்பட்டது.
பின், மல்லை சத்யா அளித்த பேட்டி:
நீதிக் கட்சி துவங்கிய நாளில், கட்சியை துவக்கியுள்ளோம். நடிகர் விஜய் துவக்கி இருப்பது தமிழக வெற்றிக் கழகம்; நாங்கள் துவங்கி இருப்பது திராவிட வெற்றிக் கழகம். திராவிடம் என்பது பரந்துபட்ட ஒன்று. நாடு முழுதும் உள்ள திராவிட இயக்க சக்திகளை நல்வழிப்படுத்தும் நோக்கில், கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த இயக்கம், ம.தி.மு.க.,விற்கு எதிரானது அல்ல. ம.தி.மு.க., -- எம்.பி., துரைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் கழிப்பட்டூரில், 10 கிரவுண்டில் கட்டி முடிக்கப்பட்ட வீடு உள்ளது; அதேபோல் ஐந்து நட்சத்திர அப்பார்ட்மென்ட் உள்ளது. இதை அவர் மறுத்தால், ஆதாரத்துடன் வெளியிட உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

