ADDED : நவ 02, 2026 06:55 PM
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ், பட்டியலின மாணவர்கள், வெளிநாடு சென்று படிக்க, தலா 30 லட்சம் ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக கடந்த ஆட்சியில், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; தற்போது, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பலருக்கு தெரியவில்லை.
நாங்கள் விசாரித்த வரை, தென் மாவட்டங்களில் பட்டியல் பிரிவில் 76 ஜாதிகள் உள்ளன. அதில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் இருந்து, ஒரு மாணவர் கூட இத்திட்டத்தில் பயன்பெறவில்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே, 300 கோடி ரூபாய் எப்படி ஒதுக்க முடியும்?
பறையர் சமூக மாணவர்கள் மட்டுமே, பெருமளவு பயன்பெறுகின்றனர். தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் சமூக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய முறைகேடு; சமூகநீதிக்கு புறம்பானது. எனவே, இத்திட்டம் குறித்து சமூகநீதித் துறை, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
– கிருஷ்ணசாமி
தலைவர், புதிய தமிழகம் கட்சி
