பரோட்டாவில் முடியை போட்டு ஓட்டலில் தகராறு செய்தவர் கைது
பரோட்டாவில் முடியை போட்டு ஓட்டலில் தகராறு செய்தவர் கைது
ADDED : டிச 10, 2024 03:41 AM

தேனி: தேனியில் ஒட்டலில் சாப்பிடும் போது பரோட்டாவில் முடியை போட்டு, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து தகராறு செய்த அல்லிநகரம் காந்திநகர் நித்யானந்தத்தை 25, போலீசார் கைது செய்தனர்.
அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயில் எதிரில் உள்ள ஓட்டலின் உரிமையாளர் பாக்கியலட்சுமி. 32. இந்த ஓட்டலில் அடிக்கடி காந்திநகரை சேர்ந்த ஐயப்பன் மகன் நித்யானந்தம் சாப்பிட செல்வது வழக்கம். டிச.6ல் கடைக்கு வந்தவர் தோசை சாப்பிட்டு விட்டு குழம்புசரியில்லை என கூறி உரிமையாளரை ஒருமையில் பேசி சென்றார்.
மறுநாள் டிச.7 மாலையில் மீண்டும் ஓட்டலுக்கு வந்தவர், 2 பரோட்டோ வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தார். திடீரென உரிமையாளரை பார்த்து, பரோட்டாவில் முடி கிடக்கிறது என கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரை பாக்கியலட்சுமியின் கணவர் சரவணன், கடை ஊழியர் வீராச்சாமி ஆகியோர் தட்டிக் கேட்டனர். ஆத்திரமடைந்த நித்யானந்தம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
ஓட்டல் உரிமையாளர் புகாரில், அல்லிநகரம் போலீசார் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அதில் தனது நெஞ்சில் இருந்த முடியை தானே பறித்து பரோட்டாவில் போடுவது தெரிந்தது. நித்யானந்தத்தை அல்லிநகரம் போலீஸ் எஸ்.ஐ., அழகுராஜா, கைது செய்தார்.

