அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : நவ 07, 2024 06:21 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இருவரிடமிருந்து ரூ.25 லட்சத்திற்கும் மேல் பணம் பெற்று ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரை சேர்ந்தவர் துரை,65; இவரது மகன் கார்த்திக் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என, துரைக்கு அறிமுகமான கோயம்புத்துார் போத்தனுாரை சேர்ந்த கலீல் ரகுமான்,58; என்பவர் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய துரை, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை 10 தவணைகளில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வங்கி கணக்கு மூலமாக கலீல் ரகுமானுக்கு அனுப்பியுள்ளார். பல மாதங்களாகியும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் கலீல் ரகுமான் இருந்துள்ளார்.
அதேபோல, கள்ளக்குறிச்சி கிராமசாவடி தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் புண்ணியமூர்த்திக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, ரூ.15 லட்சத்து 41 ஆயிரத்து 500 பெற்று ஏமாற்றி உள்ளார்.
புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து கலீல் ரகுமானை கைது செய்து விசாரிக்கின்றனர்.