'டிஜிட்டல் அரஸ்ட்' செய்வதாக மிரட்டி மூதாட்டியிடம் பணம் பறித்தவர் கைது
'டிஜிட்டல் அரஸ்ட்' செய்வதாக மிரட்டி மூதாட்டியிடம் பணம் பறித்தவர் கைது
ADDED : டிச 26, 2024 03:22 AM

ஆவடி :  ஆவடி அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி, 62; ஓய்வுபெற்ற விரிவுரையாளர்.
அவரது மொபைல் எண்ணிற்கு, கடந்த ஜூலை 17ம் தேதி, மும்பை சைபர் கிரைமில் இருந்து அழைப்பதாகக் கூறி, மர்ம நபர் ஒருவர் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அப்போது, மேரி ஜெனட் டெய்சி பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டு வாயிலாக சமூக விரோத செயல் நடந்ததாக கூறி, வங்கி கணக்கு விபரங்களை மர்மநபர் கேட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனை செய்து, வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து விசாரித்து, 'டிஜிட்டல் அரஸ்ட்' செய்வர் என, மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன அவர், மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு, 38.16 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.
அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மர்ம நபரின் மொபைல் எண்ணை கண்காணித்து, சென்னை அண்ணா நகரில் பதுங்கியிருந்த பிஜாய், 33, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், 12ம் வகுப்பு வரை படித்துள்ள பிஜாய், வேலை கிடைக்காமல், ஆன்லைன் வாயிலாக மோசடி செய்வோருடன் கூட்டு சேர்ந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்காக, 13 வங்கிகளில் கணக்கு துவங்கி, சி.பி.ஐ., அதிகாரி, மும்பை சைபர் கிரைம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரி என கூறி, பலரை ஏமாற்றியுள்ளார்.
மேலும், ஆன்லைன் பங்குச் சந்தை மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பெற்ற பணத்தை, வெளிநாடுகளில் 'கிரிப்டோ கரன்சி'யாக மாற்றி, மோசடி செய்து வந்துள்ளார்.
அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, இந்தியா முழுதும் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மோசடிக்காக பயன்படுத்திய மொபைல் போன், லேப்டாப், ஒன்பது டெபிட் கார்டுகள், நான்கு வெல்கம் கிட், இரண்டு பாஸ்புக் மற்றும் ஒன்பது செக் புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

