பா.ஜ., நிர்வாகி செந்தில்குமரனை கொன்றது குறித்து கைதான நபர்; என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம்
பா.ஜ., நிர்வாகி செந்தில்குமரனை கொன்றது குறித்து கைதான நபர்; என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம்
ADDED : அக் 28, 2025 07:45 AM

சென்னை: 'நட்புக்கு துரோகம் செய்ததுடன், ரவுடி நித்தியானந்தம் செய்து வந்த கட்டப்பஞ்சாயத்து தொழிலுக்கு இடையூறாக இருந்ததால், புதுச்சேரி பா.ஜ., நிர்வாகி செந்தில்குமரனை கொன்றோம்' என, கைதான நபர் என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமரன், 46. பா.ஜ., நிர்வாகி. இவர், 2023 மார்ச், 26ல் கொடூர மாக கொல்லப்பட்டார். இவ்வழக்கை என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கொலை தொடர்பாக, புதுச்சேரியை சேர்ந்த ரவுடி நித்தியானந்தம், 35, அவரது கூட்டாளிகள் சிவசங்கர், 23, ராஜா, 23 உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான நபர்களில், புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர், வெங்கடேஷ், ஏழுமலை ஆகியோரை, ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் சிவசங்கர் அளித்துள்ள வாக்குமூலம்:
செந்தில்குமரனும், எங்கள் ரவுடி கும்பலின் தலைவரான நித்தியானந்தமும் நெருங்கிய கூட்டாளிகள். செந்தில்குமரன், புதுச்சேரி காங்கிரசில் மாநில செயலராக இருந்தார். அவரது உறவினர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார்.
அவரின் வலதுகரமான செந்தில்குமரனும் அக்கட்சிக்கு மாறினார்.
நமச்சிவாயம் உள்துறை அமைச்சரான பின், செந்தில்குமரனின் நடவடிக்கைகள் மாறின. எங்கள் தலைவருக்கு துரோகம் செய்தார்.
திருக்காஞ்சியில் உள்ள இடம் பிரச்னை தொடர்பாக, இருவரும் எதிரிகளாக மாறினர்.
அரசியல் செல்வாக்கு காரணமாக, நித்தியானந்தம் நடத்தி வந்த கட்டப்பஞ்சாயத்து தொழிலுக்கு, செந்தில்குமரன் தொடர்ந்து இடையூறு செய்தார். பொருளாதார ரீதியாக எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
எனவே, செந்தில்குமரனை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அவர், மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளராக இருந்தார். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது, பேக்கரி கடை ஒன்றில் டீ குடித்தார்.
அவரை பின் தொடர்ந்து சென்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசினோம்.
புகை மண்டலம் சூழ்ந்து வெளியே வர முடியாமல் திணறினார். அப்போது, கொடூரமாக வெட்டிக் கொன்றோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

