வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை அவசியம்: முதல்வர் ஸ்டாலின்
வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை அவசியம்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : அக் 28, 2025 07:44 AM

சென்னை: ''வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே, சமநிலை மிக அவசியம்,'' என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின், 33வது பட்டமளிப்பு விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.
மாணவ - மாணவியருக்கு பட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பையும் வெளியிட்டார்.
பின், அவர் பேசிய தாவது:
நாட்டிலேயே, உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உயர் கல்வி சேர்க்கை மற்றும் என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை என, பல குறியீடுகள், அதற்கு சான்றாக உள்ளன.
உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அதே வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும், காலாவதியானதாக சொல்லி விடுவர்.
அதேபோல, தலைமைத்துவம் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய பதவியோ, சம்பளமோ கிடையாது. அவர்கள் உருவாக்கும் நேர்மறையான தாக்கம் தான்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ., காலத்தில், உங்களின் நேர்மை தான், உங்கள் அறிவை அளவிட உதவும்.
வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே, சமநிலை மிகவும் அவசியம். எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில அடிப்படையான விஷயங்கள் எப்போதும் மாறாது. அதில், மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் எப்படிப்பட்ட சோதனையான காலத்திலும், எந்த சூழலிலும், நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு போன்ற விழுமியங்களை கைவிடக்கூடாது. மாணவர்கள், நல்ல மனிதர்களாக, வெற்றியாளர்களாக, மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக வளர வேண்டும்.
நீங்கள் வளரும் போது, கீழே இருப்பவர்களையும் கைதுாக்கி விட வேண்டும். இதுதான், உண்மையான தலைமைத்துவ பண்பு.
நவீன உலகத்தில், பல்வேறு பன்னாட்டு பெரு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக நீங்கள் வர வேண்டும். பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உயர் கல்வித்துறை செயலர் சங்கர், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத் தலைவர் ரவி அப்பாசாமி, நிர்வாக குழு உறுப்பினர் பாலபாஸ்கர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகிருஷ்ணா உட்பட பலர் பங்கேற் றனர்.

