மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களுக்கு உதவ நிவாரண முகாம்கள்; தமிழக அரசு அமைப்பு
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களுக்கு உதவ நிவாரண முகாம்கள்; தமிழக அரசு அமைப்பு
ADDED : அக் 28, 2025 07:43 AM

சென்னை: மழைநீர் சூழ்ந்துள்ள பகுதி மக்களுக்கு உதவிகளை அளிக்கும் நோக்கத்தில், வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுதும் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த, 17 முதல் 27ம் தேதி வரை சராசரியாக, 22.1 செ.மீ., மழை பெய்துள்ளது.
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும் நோக்கத்தில், வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக, 17 முதல் 25ம் தேதி வரை, 408 மருத்துவ முகாம்கள், 166 நடமாடும் மருத்துவ முகாம்கள் என, மொத்தம் 574 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, 24,146 பேர் பயன் அடைந்துள்ளனர்.
தயார் நிலை சென்னை மாநகராட்சி வாயிலாக, 215 இடங்களில், நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக, 106 சமையல் கூடங்கள் உள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேற்று வரை, 4.09 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மழைநீர் தேங்கும் இடங்களில், 2,000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக, 457 இயந்திரங்களும் தயாராக உள்ளன.
உதவி எண் சென்னையில், 22 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மக்களுக்கு மழை வெள்ளம் காரணமாக, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 150 இணைப்புகளுடன் கூடிய, '1913' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
பருவ மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அகற்ற, சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட, 22,000 பேரும், சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 2,149 களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னையில் பொதுமக்களுக்கு, 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக, 15ம் தேதி முதல் குடிநீர் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

