முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : அக் 13, 2025 01:52 AM
சென்னை:மது போதையில், முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிர ட்டல் விடுத்த, மாற்றுத் திறனாளி நபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறையை, நேற்று மதியம் மொபைல் போனில், மர்ம நபர் தொடர்பு கொண்டார்.
அப்போது, சென்னை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள, முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுத்து, தொடர்பை துண்டித்து விட்டார்.
சிக்கவில்லை இத்தகவல் உடனடியாக, பாதுகாப்பு பிரிவு மற்றும் தேனாம்பேட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரியவந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன், போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன், 36, என்பது தெரியவந்து.
அவரை பிடித்தபோது, அவர் சிறு வயதிலேயே, இளம்பிள்ளை வாதம் காரணமாக இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்தது.
சிம்கார்டு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஐயப்பன், 2020ம் ஆண்டு சென்னை கோயம்பேடு பேருந்து முனையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, எழும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்தவர்.
அதன்பின், 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்திருப்பதும், தற்போது மது போதையில் முதல்வர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
எச்சரிக்கை இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார், ஐயப்பனை மீண்டும் கைது செய்தனர்.
அவர் மாற்றுத்திறனாளி என்பதாலும், பள்ளிகளில் படிக்கும் இரண்டு மகள்கள் இருப்பதாலும், இனி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது என, எச்சரிக்கை செய்யப்பட்டார்.
பின், போலீஸ் ஜாமினில் விடுவிக்கப் பட்டு, அவரது மனைவியுடன் அனுப்பி வைக்கப்பட்டார் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.