போட்டி தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர் 'மிஸ்சிங்' அடையாளத்தை பறிப்பதாக திருநங்கையர் குற்றச்சாட்டு
போட்டி தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர் 'மிஸ்சிங்' அடையாளத்தை பறிப்பதாக திருநங்கையர் குற்றச்சாட்டு
ADDED : அக் 13, 2025 01:51 AM
சென்னை: 'டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளில், மூன்றாம் பாலினத்தவர் பெயர், 'பெண்கள்' பிரிவில் இடம் பெறுவதால், தங்களின் அடையாளம் பறிக்கப்படுகிறது' என, திருநங்கையர் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், மூன்றாம் பாலினத்தவருக்கு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இடஒதுக்கீடு எனினும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற, இடஒதுக்கீடு அவசியம் என்பது, மூன்றாம் பாலினத்தவரின் நீண்ட கால கோரிக்கையாகும்.
'மூன்றாம் பாலினத்தவர், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற, மாநில அரசு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகா தவிர பிற மாநிலங்களில், இத்தீர்ப்பு அமலாகவில்லை.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில், திருநங்கையர் பெயர் மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் இடம் பெறாமல், பெண்கள் பிரிவில் இடம் பெறுவது, அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குழப்பங்கள் இதுகுறித்து, திருநங்கை ஆர்வலர் ரக் ஷிகா ராஜ் கூறுகையில், ''உச்சநீதிமன்ற தீர்ப்பை, தமிழக அரசு இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், அரசு போட்டி தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன.
''மூன்றாம் பாலினத்தவருக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டும், முதல்வர் அதை நடைமுறைப்படுத்தவில்லை,'' என்றார்.
திருநங்கை டட்லிகா முத்தீஸ்வரன் கூறுகையில், ''நான் எம்.ஏ., - பி.எட்., பட்டதாரி. கடந்த ஜூன் மாதம் அங்கன்வாடி ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்த போது, திருநங்கை என்பதால், என்னை நிராகரித்து விட்டனர்.
''டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் விண்ணப்பித்தால், எங்கள் பெயர் பெண்கள் பிரிவிற்கு மாற்றப்படுகிறது. இது, எங்களின் அடையாளத்தை பறிப்பதாகும். மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு, உரிய முறையில் வழங்கப்பட்டால் இது போன்ற பிரச்னைகள் வராது,'' என்றார்.