ADDED : மே 10, 2025 01:39 AM

வடலுார்: வடலுார் ஓட்டலில் ஓய்வு பெற்ற அதிகாரியிடம் நகை மற்றும் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்,59; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரி. இவரது மூத்த மகன் கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த வீணங்கேணி பகுதியில் வசிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு வீணங்கேணி வந்த சுகுமார், கடந்த 4ம் தேதி இளைய மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பஸ்சில் குடும்பத்தினருடன் சென்னை புறப்பட்டார்.
செல்லும் வழியில் வடலுார் நான்கு முனை சந்திப்பில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட போது, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்த பையை மர்ம நபர் திருடிச் சென்றார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து, 'சிசிடிவி' யில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில், வடலுார் பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக நேற்று காத்திருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
இதில், குறிஞ்சிப்பாடி, தெற்கு தெரு அமிர்தராஜ், 41; என்பதும், கடந்த 4ம் தேதி ஓட்டலில் சுகுமாரிடம் பணம், நகைகள் திருடியதையும் ஒப்புக் கொண்டார். உடன், அவரை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.