கோவில் விழாவில் கரகம் எடுத்து சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
கோவில் விழாவில் கரகம் எடுத்து சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : ஆக 07, 2025 03:02 AM

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே சுவாமி வீதியுலாவில் கரகம் துாக்கி சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்புத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 40; விவசாயி. கீழ்புத்தமங்கலம் கோவில் திருவிழா நடந்துவரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. அப்போது, செந்தில்குமார் பூங் கரகம் துாக்கி சென்றார்.
இரவு 11:50 மணிக்கு சுவாமி வீதியுலா செல்லும் வழியில் மின்சார ஒயர் அறுந்து விழுந்து கிடப்பது தெரியாமல் அதன் மீது கால் வைத்தார். இதில் மின்சாரம் தாக்கி செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.