போதைப்பொருள் கடத்தல் வழக்கு 3 ஆண்டாக தேடப்பட்டவர் சிக்கினார்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு 3 ஆண்டாக தேடப்பட்டவர் சிக்கினார்
ADDED : ஜூலை 30, 2025 06:24 AM

சென்னை : ராமநாதபுரத்தில் இருந்து துாத்துக்குடி வழியாக இலங்கைக்கு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் கடத்தல் வழக்கில், மூன்று ஆண்டுகளாக என்.சி.பி., அதிகாரிகளுக்கு 'தண்ணி காட்டி' வந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தில் இருந்து துாத்துக்குடி செல்லும் நெடுஞ் சாலையில், 'டாடா சுமோ விக்டா' காரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக, 2022ல், என்.சி.பி., எனப்படும், சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சென்னை மண்டல இயக்குநர் அரவிந்த் தலைமையிலான அதிகாரிகள், அந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹாஷிஷ் ஆயில்' எனப்படும், கஞ்சா எண்ணெய் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதன்பின், அவர்களின் கூட்டாளிகள் இருவரும் கைதாகினர்.
தொடர் விசாரணையில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிலுவைராஜ், 33 என்று தெரியவந்தது.
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இவர், தன் கூட்டாளிகள் வாயிலாக, ராமநாதபுரத்தில் இருந்து துாத்துக்குடி வழியாக, இலங்கைக்கு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததை, என்.சி.பி., அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இவர், என்.சி.பி., அதிகாரிகளிடம் சிக்காமல், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததுடன். வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்தவரை, என்.சி.பி., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்; கூட்டாளி களையும் தேடி வருகின்றனர்.