லாரி ஏற்றி மனைவியை கொலை செய்தவர் கைது; உடந்தையாக இருந்தவரையும் கொன்ற கொடூரம்
லாரி ஏற்றி மனைவியை கொலை செய்தவர் கைது; உடந்தையாக இருந்தவரையும் கொன்ற கொடூரம்
ADDED : நவ 19, 2024 12:06 AM

கருமத்தம்பட்டி: கோவை மாவட்டம், வாகராயம் பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன், 42; தொழிலாளி. இவர் மீது பல வழக்குகள் உள்ளன. திமிங்கல உமிழ் நீர் மோசடி வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமினில் வந்துள்ளார்.
கடந்த, 15ம் தேதி, இளங்கோவன் வீட்டுக்கு சென்ற கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பியது. வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போலீசார், இளங்கோவன் வசித்த வீட்டின் உரிமையாளர் அமிர்தராஜ், கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, திண்டுக்கல்லில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், அமிர்தராஜ், கூலிப்படையை சேர்ந்த மைக்கேல் புஷ்பராஜ், வீராசாமி, ஆரோக்கியசாமி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
இளங்கோவன் கொலை குறித்து விசாரித்த போலீசாருக்கு, மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அமிர்தராஜுக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த, 2019ல் மனைவி மீது சந்தேகப்பட்டு, அமிர்தராஜ் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
மனைவியை கொலை செய்ய முடிவு செய்து, தன் வீட்டில் வசித்த இளங்கோவனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். தேனியை சேர்ந்த லாரி டிரைவரை அழைத்து வந்து, விஜயலட்சுமியை லாரி ஏற்றி கொலை செய்து, அதை விபத்தாக மாற்றி நாடகமாடி உள்ளனர்.
விபத்து வழக்கில் இழப்பீட்டு பணமாக, 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதில் ஒரு பகுதி பணத்தை கொடுப்பதாக, இளங்கோவனிடம் கொலைக்கு முன்னரே அமிர்தராஜ் கூறியதாக தெரிகிறது.
அந்த பணத்தை இளங்கோவன் கேட்டு பிரச்னை செய்துள்ளார். 'பணம் தராவிட்டால் போலீசில் புகார் அளிப்பேன்' என, மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அமிர்தராஜ், இளங்கோவனை கூலிப்படையினரை ஏவி, கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.
அமிர்தராஜ், அவரது இரண்டாவது மனைவி கலைவாணி, 35, ஆகியோரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.