UPDATED : ஜூலை 21, 2025 08:01 AM
ADDED : ஜூலை 21, 2025 01:34 AM

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டத்தில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், ரயிலில் தப்பிய நிலையில், சம்பவ இடத்தை சுற்றி, மொபைல் போன் டவரில் பதிவாகியுள்ள, 600 பேர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த, 12ம் தேதி மதியம் பள்ளி முடிந்து, பாட்டி வீட்டிற்கு தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்டுகொடுமை செய்தார்.
சம்பவம் நடந்து ஒன்பது நாட்களாகியும், மர்ம நபர் குறித்து போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை. அந்த நபரை, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் மேற்பார்வையில், மூன்று டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், அந்த இடத்தை சுற்றி, மொபைல் போனில் பேசிய நபர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர். அதிலிருந்து, 600 எண்களை தேர்வு செய்து, அந்த எண்ணுக்கு உரியவர்களிடம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உருவ ஒற்றுமை
அவர்களிடம், சிசிடிவியில் பதிவாகி உள்ள மர்ம நபரின் படத்தை காண்பித்து விசாரிப்பதுடன், உருவ ஒற்றுமை உடைய நபர்களையும் கண்காணிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர், ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து, புறநகர் ரயில் வாயிலாக ஆரம்பாக்கம் வந்துள்ளார். அவருக்கு மொபைல் போன் அழைப்பு வந்துள்ளது. அவர் ஹிந்தியில் பேசி உள்ளார்.
இதனால், சூளூர்பேட்டை மற்றும் ஆரம்பாக்கம் இடையே, ரயில் பாதையில் உள்ள டவர்களில் பதிவான மொபைல்போன் எண்களையும், போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவத்திற்கு பிறகு, அந்த நபர் ரயிலில் வெளிமாநிலத்திற்கு தப்பி சென்றதை, போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதனால், மர்ம நபர் சென்ற ரயில் வழித்தடம் முழுதும் விசாரணை நடக்கிறது. நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களுக்கு, அந்த நபரின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிற மாநில போலீசாரும், ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
இதனால், மர்ம நபர் விரைவில் சிக்குவார் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
த.வெ.க., போராட்டம்
குற்றவாளியை உடனடி யாக கைது செய்ய வலியுறுத்தி, நேற்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தை, த.வெ.க.,வினர், 300 பேர் முற்றுகையிட்ட னர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு குவிந்த இளைஞர் கூட்டத்தை, போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களில், 150க்கும் மேற்பட்டோர் அத்துமீறி ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து கோஷமிட்டனர். பின்னர், போலீசாரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.
இதனால், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.