கூட்டாளி வீட்டில் கோகைன் பதுக்கினோம் போலீசிடம் சிக்கியவர் வாக்குமூலம்
கூட்டாளி வீட்டில் கோகைன் பதுக்கினோம் போலீசிடம் சிக்கியவர் வாக்குமூலம்
ADDED : ஜூலை 08, 2025 05:11 AM
சென்னை: 'சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த, பயாஸ் ஷமேட் என்பவரின் வீட்டை கோகைன் பதுக்கி வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்தோம்' என, போலீஸ் காவல் விசாரணையில் பிரதீப்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோகைன் எனப்படும், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி பிரசாத், 33, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார், 38, கானா நாட்டை சேர்ந்தச் ஜான், 38, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின், 35, உள்ளிட்டோரை, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரதீப்குமார் உள்ளிட்ட நால்வரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீசாரிடம் பிரதீப்குமார் அளித்துள்ள வாக்குமூலம்:
கானா நாட்டை சேர்ந்த ஜானிடம், கோகைன் மற்றும் மெத்ஆம்பெட்டமைன் வாங்கி, கூட்டாளிகளுடன் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்தேன். எங்கள் கும்பலில், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பயாஸ் ஷமேட், 31, முக்கிய நபர்.
அவரது வீட்டை கோகைன் பதுக்கி வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்தோம். இதற்காக, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பதுங்கி இருந்த ஜானிடம் இருந்து, போதைப் பொருட்களை சென்னைக்கு கடத்தி வரும் பொறுப்பை, நான் ஏற்று நடத்தி வந்தேன்.
என் வாயிலாகவே, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர், நடிகையருக்கு கோகைன் விற்று வந்தார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோகைன் வழக்கில் கைதான அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி பிரசாத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டார்.
காவலில் எடுக்கப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை முடிந்ததையடுத்து, புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

