ஓ.எஸ்.ஆர்., நிலங்களில் மரம் வளர்ப்பது கட்டாயம் பாதை அகலத்துக்கும் வருகிறது கட்டுப்பாடு
ஓ.எஸ்.ஆர்., நிலங்களில் மரம் வளர்ப்பது கட்டாயம் பாதை அகலத்துக்கும் வருகிறது கட்டுப்பாடு
ADDED : ஜன 20, 2024 01:42 AM
சென்னை:கட்டுமான திட்டங்களில் திறந்தவெளி ஒதுக்கீடாக ஒப்படைக்கப்படும் ஓ.எஸ்.ஆர். நிலங்களில் குறிப்பிட்ட அளவு பகுதியில் மரங்கள் வளர்ப்பதை கட்டாயாமாக்கும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
நகர் ஊரமைப்பு சட்டப்படி புதிய கட்டுமான திட்டங்களில் 10 சதவீத நிலத்தை திறந்தவெளி ஒதுக்கீடாக ஒப்படைக்க வேண்டும்.
இதில் 32291 சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களில் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களுக்கு ஈடாக பணம் செலுத்துவதற்கு மாற்றாக நிலத்தை ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
இந்நிலையில் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை பெறுவது பயன்படுத்துவது தொடர்பாக எழும் பிரச்னைகள் குறித்து வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் பெரும்பாலான பகுதிகளில் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன.
இந்நிலங்களை பயன்படுத்துவதை முறைப்படுத்த விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி ஒதுக்கீடாக பெறும் நிலங்களில் பூங்காக்கள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. காலநிலைமாற்றம் தொடர்பான பிரச்னைகளை எதிர் கொள்வதில் மரம் வளர்ப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனை கருத்தில் வைத்து ஓ.எஸ்.ஆர். நிலத்தில் குறிப்பிட்ட அளவு பகுதியில் மரம் வளர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும். இதற்காக விதிகள் மாற்றி அமைக்கப்படும்.
இதே போன்று கட்டுமான நிறுவனங்கள் ஓ.எஸ்.ஆர். நிலங்களை ஒப்படைக்கும் போது அதன் பரப்பளவை மட்டும் அதிகாரிகள் சரி பார்க்கின்றனர்.
அந்த நிலத்தின் வடிவம் சீரானதாக உள்ளதா என்பதையும் உள்ளாட்சி அமைப்புகள் கவனிக்க அறிவுறுத்தப்படும்.
மேலும் பெரும்பாலான திட்ட பகுதிகளில் ஓ.எஸ்.ஆர். என ஒதுக்கப்படும் நிலங்கள் பிரதான சாலையுடன் முறையான இணைப்பு இல்லாமல் இருக்கின்றன.
இதனால் இந்நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதில் உட்புறத்தில் ஒதுக்கப்படும் நிலங்களுக்கு பிரதான சாலையுடன் இணைக்கும் பாதை 29 அடி அகலத்தில் இருப்பது கட்டாயமாக்கப்படும். இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.