ADDED : அக் 10, 2024 01:10 AM

பிரம்மலோகத்திற்கும் மேலே மணித்வீபம் அமைந்துள்ளது. வைகுண்டம், கைலாசம், கோலோகம் முதலியவற்றை விட, மணித்வீபம் மிகவும் பெருமை வாய்ந்தது. இதற்கு,'சர்வலோகாதிகம்' என்ற பெயரும் உண்டு. இந்தத் தீவு, பெரிய அமுதக்கடலின் நடுவில் அமைந்துள்ளது.
இதற்கு வடக்கே இரும்பு மதில் ஒன்று உண்டு; அது மிக உறுதியும், உயரமும் உடையது. பொற்பிரம்புகளை பிடித்தவாறு, பலர் அதை காவல் புரிகின்றனர். அங்கு ஆரவாரம் அமைந்திருக்கும்.
அந்த இரும்பு பிரகாரத்துக்கு வடக்கே வெண்கல மயமான ஒரு மண்டபம் உள்ளது. அங்கு எப்போதும் பேரொளி அமைந்திருக்கும். ஆறு ருதுக்களிலும், மலர்கின்ற பூக்களும், பழங்களும் எப்போது அங்கு கிடைக்கும்.
இதற்கு வடக்கில் தாமிரப் பிரகாரம் உள்ளது; அவ்விடத்தே கற்பக மரங்கள் நிறைந்திருக்கும். வசந்தன் தன்னுடைய மதுஸ்ரீ, மாதவஸ்ரீ எனும் இரு மனைவியருடனும், அங்கு காலத்தை சந்தோஷமாகக் கழிக்கிறான். அவ்விடத்தே குயிலோசை நிறைந்திருக்கும்.
அதற்கும் வடக்கில் ஏழு யோஜனை அகலமுள்ளதும், பஞ்சலோகத்தால் அமைந்ததுமான ஒரு பிரகாரம் இருக்கிறது; அதன் நடுவில் மந்திரசாலை ஒன்று உண்டு. அங்கு, சித்தர்கள் தம் மனைவியருடன் வசிக்கின்றனர். சரத் ருதுவின் நாயகன், லக் ஷ்மி, ஊர்ஜ லக் ஷ்மி எனும் இரண்டு மனைவியருடன் அவ்விடத்தில் வசிக்கிறான்.
ரத்தினசாலை
அந்த இடத்திற்கு எதிரில் சிகரங்களோடு கூடிய வெள்ளி பிரகாரம் உண்டு. பாரிஜாத மரங்கள் அங்கு வளர்ந்துள்ளன. அங்கே ஹேமந்த ருது, மிக்க மகிழ்ச்சியுடன், தன்னுடைய மனைவியராகிய சகஸ்ரீ, சகஸ்யஸ்ரீ என்பவர்களுடன் வசிக்கிறான். தேவி விரதத்தை செய்பவர்கள் அங்கு நிறைந்துள்ளனர்.
இதற்கு முன்புறத்தில் பெரியதொரு தங்கப் பிரகாரம் உள்ளது; கதம்ப மரங்கள் அங்கு நிறைந்திருக்கும். சிசிர ருது தன் மனைவியராகிய தபஸ்ரீ, தபஸ்யஸ்ரீ என்பவர்களுடன் மகிழ்ச்சியுடன் அங்கு வசிக்கிறான்.
அதற்கும் வடக்கில் ஏழு யோசனை பரப்புடைய பித்தளைப் பிரகாரம் உள்ளது. ஹரிசந்தன மரங்கள் அங்கு நிறைந்துள்ளன. தேவியின் பொருட்டு தர்மகாரியம் செய்தவர்கள் அங்கு வசிக்கின்றனர். வருஷ ருது என்பவன் தன்னுடைய, 12 மனைவியருடன் வசிக்கும் இடம் அது.
இந்த இடத்தில் எதிரில் புஷ்பராக மயமான பிரகாரம் இருக்கிறது. ரத்தின மயமாக இருப்பதால், அதற்கு ரத்தினசாலை என்றும் பெயர் உண்டு. திக்பாலகர்கள் அங்கு வாழ்கின்றனர்.
அதற்கு கிழக்கில் அமராவதி என்ற பட்டினம் அமைந்துள்ளது. அங்கு இந்திரன் தன் மனைவியாகிய இந்திராணியுடன் வசிக்கிறான். அக்கினி கோணத்தில் அக்கினிபுரி எனும் நகரம் உள்ளது. அங்கு அக்கினி தேவன் தன் மனைவியராகிய ஸ்வாவா, ஸ்வதா என்பவர்களுடன் வசிக்கிறான்.
தென்புறத்தில் தான் யமபுரி உள்ளது. தர்மராஜா தன் மனைவியுடனும், சித்திரகுப்தனுடனும் அங்கு வாழ்கிறான். தென்மேற்கில் நைருதி, கத்தியை கையில் பிடித்தபடி தன் மனைவியோடு சேர்ந்திருந்து மதுபானம் செய்து மகிழ்ந்திருக்கிறான். வடமேற்கில் வாயுதேவன் ஆடம்பரமாக வாழ்கிறான். வடக்கில் குபேரனும், வடகிழக்கில் ஈசான்ய தேவரும் வாழ்கின்றனர்.
புஷ்பராக பிரகாரத்திற்கு முன் பத்மராகப் பிரகாரம் ஒன்று உள்ளது; அங்கு 64 கலைகளும் சக்தி வடிவங்களாக காட்சி அளிக்கின்றன. பத்மராகப் பிரகாரத்துக்கு அடுத்தபடி கோமேதகப் பிரகாரம் உண்டு. அங்கு மகாதேவி, 32 சக்திகளுடன் காட்சி அளிக்கிறாள்.
கோமேதகப் பிரகாரத்தை அடுத்து வஜ்ர பிரகாரம் உண்டு. அங்கு, ஸ்ரீதேவியின் பரிசனங்கள் மிக மகிழ்ச்சியுடன் தத்தம் வேலைகளை செய்து கொண்டிருப்பர். அவர்கள் பேரழகு உடையவர்களாய், சிருங்கார ரஸப் பிரதானர்களாய் இருந்து சிரித்த முகங்களுடன் காட்சியளிப்பர்.
இந்த வஜ்ர பிரகாரத்திற்கு முன்பக்கத்தில் வைடூரிய பிரகாரம், 10 யோசனை, பரப்பில் அமைந்துள்ளது. அங்கு சப்தமாதாக்களும், லக் ஷ்மி தேவியும் நித்தியவாசம் செய்கின்றனர்.
வைடூரிய பிரகாரத்துக்கு அடுத்தபடி இந்திரநீல பிரகாரம் அமைந்துள்ளது. இங்கு ஒரு பெரிய தாமரை உள்ளது. சுதர்சனத்திற்கு அடுத்தபடியாக உள்ளது. இங்கு, 16 சக்திகள் அமைந்துள்ளன; ஜகன்மாதாவுக்கு சேனாதிபதிகளாக இவர்கள் உள்ளனர்.
இந்திரநீல பிரகாரத்துக்கு முன்பாக, 10 யோசனை அகலமுடைய முத்து பிரகாரம் அமைந்துள்ளது. அங்கு அம்பிகைக்கு ஆலோசனை கூறக்கூடிய அமைச்சர்கள் நிறைந்துள்ளனர்.
இந்த முத்து பிரகாரத்தை அடுத்து மரகதப் பிரகாரம்; அங்கு எல்லாம் மரகத மயம். அங்கு ஓர் அறுகோண சக்கரம் உள்ளது. அதன் கிழக்கில் காயத்ரி தேவியும், நிருதி கோணத்தில் மகாவிஷ்ணுவும், வாயு கோணத்தில் ருத்திர மூர்த்தியும், அக்னி கோணத்தில் குபேரனும், மேற்கில் ரதியோடு, மன்மதனும் விளங்குவர்.
அந்த மரகதப் பிரகாரத்துக்கு பக்கத்தில் நுாறு யோசனைப் பரப்புள்ள பவளப் பிரகாரம் உள்ளது; அதன் நடுவில் பஞ்ச சக்திகள் வீற்றிருக்கின்றனர்.
இந்த பவளப் பிரகாரத்திற்கு அடுத்தபடியாக நவரத்தின பிரகாரம் ஒன்று உள்ளது. அங்கு ஸ்ரீதேவிக்குரிய மந்திரங்களும், மகா வித்யைகளும் நிறைந்துள்ளன. மேலும் ஆபரண தேவதைகள், சர்வ பூஷணங்களுடன் கோடி சூரிய பிரகாசமாகக் காட்சியளிப்பர். சப்த கோடி மகா மந்திரங்களும் அங்கு வசிக்கின்றன.
அதற்கு எதிரில் தான் சிந்தாமணிக் கிருகம் உள்ளது. சிந்தாமணி கிருகத்தின் மத்தியில் ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உள்ளது. அம்மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் சிருங்கார மண்டபம், முக்தி மண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம் உள்ளன.
சந்தோஷ ஜீவனம்
அவற்றிற்கு எதிரே பூந்தோட்டமும், புஷ்கரிணியும் உள்ளன. சிருங்கார மண்டபத்தில் ஜகதன்னை வீற்றிருந்து, கான அமுதத்தை பருகுவாள். முக்தி மண்டபத்தில் இருந்து, ஆத்மாக்களின் பாசங்களை போக்க முயலுவாள். ஞான மண்டபத்தில் இருந்து ஞானோபதேசம் செய்தருள்வாள்; ஏகாந்த மண்டபத்தில் இருந்து உலகத்தை காப்பதற்குரிய சிந்தனையை செய்து கொண்டிருப்பாள்.
மேற்கூறிய சிந்தாமணி மண்டபத்தில் பத்து படிகளோடு கூடிய ஒரு மஞ்சம் உள்ளது; அதற்கு கால்கள் பிரம்மா, விஷ்ணு, ருத்திரா, மகேஸ்வரர் ஆவர். சதாசிவர் அந்த மஞ்சத்திற்கு பலகையாக அமைந்துள்ளார். மகாதேவர், புவனேஸ்வரராக காட்சி அளிக்கிறார்.
இங்கே, ஜகன்மாதா சர்வாபரண பூஷிதையாக சகல தேவதைகளும் புடைசூழ காட்சியளிப்பார். புவனேஸ்வரிக்கு வலது பக்கத்தில், நவரத்தின மயமான ஓர் ஆறு உள்ளது; அது பல கிளைகளாகப் பிரிந்து, பலவித புரசங்களாக பரிணமித்து, வேண்டுவோருக்கு வேண்டியவற்றை நல்கும் தன்மை உடையதாக விளங்குகிறது.
அங்கே நோய், திரை, கவலை, மாத்சரியம், குரோதம் முதலியன இல்லை. எல்லா பெண்களும் நித்திய யவ்வனத்துடன் பிரகாசிப்பர். எல்லாருமே ஜகதன்னையை பூஜித்தபடியே இருப்பர். அங்கு சாலோக, சமீப, சாரூப, சாயுஜ்ய பதவிகளை அடைய விரும்புபவர்கள், அந்த அந்தப் பதவிகளை அடைவர். சகல ஜஸ்வர்யம், சர்வ சிருங்காரம், சகல பராக்கிரமம் முதலியனவற்றை அங்கு யாவரும் அடைந்து விளங்குவர்.
இத்தகைய பராசக்தியை நவராத்திரிகளிலும் வழிபட்டு, விஜயதசமியில் அவள் ஆசிர்வாதத்துடன் சந்தோஷ ஜீவனத்தை நடத்துவோம்!

