sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அந்துமணியின் 'பா.கே.ப., - 23' உள்ளிட்ட 48 நுால்கள் புத்தக காட்சியில் மணிமேகலை பிரசுரம் வெளியீடு

/

அந்துமணியின் 'பா.கே.ப., - 23' உள்ளிட்ட 48 நுால்கள் புத்தக காட்சியில் மணிமேகலை பிரசுரம் வெளியீடு

அந்துமணியின் 'பா.கே.ப., - 23' உள்ளிட்ட 48 நுால்கள் புத்தக காட்சியில் மணிமேகலை பிரசுரம் வெளியீடு

அந்துமணியின் 'பா.கே.ப., - 23' உள்ளிட்ட 48 நுால்கள் புத்தக காட்சியில் மணிமேகலை பிரசுரம் வெளியீடு


ADDED : ஜன 05, 2025 11:35 PM

Google News

ADDED : ஜன 05, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில், அந்துமணி எழுதிய, 'பார்த்தது கேட்டது படித்தது பாகம் - 23' உள்ளிட்ட 48 நுால்களை, மணிமேகலை பிரசுரம் நேற்று வெளியிட்டது.

சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., புத்தகக் காட்சி அரங்கில், 48 நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

'தினமலர்' நாளிதழின் இணைப்பான, 'வாரமலர்' இதழில், அந்துமணி எழுதிய, பா.கே.ப., என்ற, 'பார்த்தது கேட்டது படித்தது' நுாலின் - 23ம் பாகத்தை, 'குமுதம்' இதழின் அதிபர் ஜவஹர் பழனியப்பன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பெற்றுக் கொண்டார்.

சால்வை அணிவிப்பு


தொடர்ந்து, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மா.கருணாநிதி எழுதிய, 'மக்களை நேசிக்க பயிற்சி பெறுங்கள்' என்ற நுாலை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட, நடிகை தேவயானி பெற்றுக்கொண்டார்.

நுாலாசிரியர் மா.கருணா நிதிக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து, 'தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் -பாகம் - 9' உள்ளிட்ட நுால்கள் வெளியிடப்பட்டன. திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பனுக்கு, 'தமிழ்வாணன் விருது' மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

விருது பெற்ற அவர் பேசுகையில், ''இந்த விருது எனக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளது. மக்களுக்காக என் எழுத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்ற சுமையை ஏற்றி வைத்துள்ளது. அதற்கு உண்மையாக இருப்பேன்,'' என்றார்.

நீதிபதி மஞ்சுளா பேசுகையில், ''இங்கு நடிகர் - நடிகையர், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். நான் நீதிபதியாக பங்கேற்றுள்ளேன். நீதி என்பதற்கு, தமிழில் அறம் என்று பொருள். அறத்தைப் போதிப்பதே நம் தமிழ் இலக்கியங்கள். இந்த நுால்களை படிப்போரும் அறத்தின் வழி நடக்க வேண்டும்,'' என்றார்.

அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ''நான் சிறுவனாக இருந்த போது, மணிமேகலை பிரசுரத்தை உருவாக்கிய, தமிழ்வாணன் எழுதிய, 'சங்கர்லால் துப்பறிகிறார்' நாவலை தொடர்ந்து படிப்பேன். என் பெயரில் சங்கர் இருப்பதால், அந்த கதை நாயகனாக என்னை கற்பனை செய்து கொள்வேன். அப்படி வாசகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தமிழ்வாணன். இந்த நிகழ்வில், பிளஸ் 1 வகுப்பு மாணவி சாரல் சிந்தனா நுால் முதல், 50,000 பிரசவங்களை பார்த்த டாக்டர் தாமரை ஹரிபாபுவின் நுால் வரை வெளியிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

சஞ்சீவி ராஜா சுவாமிகள் பேசுகையில், ''திருவாசகத்தை மனப்பாடம் செய்வதால் பலன் கிடைக்காது. அதை உணர்ந்து படித்து, கடைப்பிடித்தால் பலன் கிடைக்கும். இந்த நுால் வெளியீடும் அப்படிப்பட்டதே,'' என்றார்.

'குமுதம்' இதழின் அதிபர் ஜவஹர் பழனியப்பன் பேசுகையில், ''குமுதம் இதழில், என் தந்தை பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அப்படிப்பட்டது தான் வாழ்க்கையும். நாம் ஒவ்வொரு வினாடியையும் உணர்ந்து அனுபவிக்க, புத்தகங்கள் அவசியம். அவற்றில், தன்னம்பிக்கை நுால்களே அதிகளவில் விற்பனையாகின்றன,'' என்றார்.

ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பேசுகையில், ''நான் சிறுவனாக இருந்த போது, ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினேன். அப்போது, தமிழில் பிரபலமான எழுத்தாளராக இருந்த தமிழ்வாணனை சந்தித்து, அதை தந்தேன்.

''அவர் சில கருத்துக்களை கூறினார். நான் வளர்ந்த பின், அவர் எனக்கு ஜோதிடம் சொன்னார்; அதன்படியே நடந்தது. அவர் மறைந்த பின், என்னிடம் இருந்த, 'காணாமல் போன வைரங்கள்' என்ற தமிழ்வாணன் புத்தகத்தை, கறையான் தின்று விட்டது. அதை அறிந்த ரவி தமிழ்வாணன், வாசகரிடம் இருந்து பெற்று, எனக்கு அச்சிட்டு தந்தார். அவ்வளவு பொறுப்பு மிக்க பிரசுரம் இது,'' என்றார்.

சுவாரஸ்யங்கள்


திரைப்பட இயக்குனர் வாசு பேசுகையில், ''தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளில் வரும் திருப்பங்களில் இருந்தும், மற்ற நுால்களில் இருந்தும், திரைப்படத்துக்கான சுவாரஸ்யங்களை கற்றுக் கொள்கிறோம்,'' என்றார்.

திரைப்பட இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் பேசுகையில், ''இந்த புத்தகக் காட்சி வருவதற்கே இயலாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இவை, புத்தகங்களை காதலிப்போருக்கான சான்றுகளாக உள்ளன,'' என்றார்.

நடிகை தேவயானி பேசுகையில், ''இந்த விழாவில், அதிக பெண் எழுத்தாளர்களின் நுால்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் மணிமேகலை பிரசுரத்தை வாழ்த்துகிறேன்,'' என்றார்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசியதாவது:

நுால்கள் எழுதுவோருக்கு, அவற்றை எப்படி வெளியிட வேண்டும் என்பது தெரியாது. மணிமேகலை பிரசுரம், அவர்களை கண்டறிந்து, அவர்களிடம் உள்ள எழுத்துக்களை பெற்று, நுாலாக்கி வாசகர்களுக்கு வழங்குகிறது. அதாவது, நுாலாக்க நாங்க ரெடி... நுால் எழுத நீங்க ரெடியா? என்பது தான் இதன் அர்த்தம்.

பெரும்பாலான நுாலாசிரியர்கள், தங்களின் நுால்களில், ஆங்கில எழுத்தாளர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவர்.

இனி, அப்படி செய்யாதீர்கள். நம் மொழியில் கருத்துக்களுக்கு பஞ்சமில்லை. அதனால், நம் எழுத்தாளர்களை மேற்கோள் காட்டுங்கள். குழந்தைகளையும் படிக்க வைக்கும் வகையில், புத்தகங்களில் இருந்து கேள்விகளை கேளுங்கள். இதனால், அவர்கள் துாண்டப்படுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us