பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பல சார்: பழனிசாமி
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பல சார்: பழனிசாமி
ADDED : ஜன 28, 2025 06:19 AM

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: சென்னை திரு.வி.க., நகர் பகுதியில், மூன்று சிறுமியரை, மூன்று நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதான நிலையில், அவர்களில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால்தான், குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை தி.மு.க., அரசு உணர வேண்டும்.
'சார்' போன்றோரை, ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழகத்தில் பல 'சார்'கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

