மார்கழி இசை விழா துவக்கம் ரஞ்சனி - காயத்ரிக்கு விருது
மார்கழி இசை விழா துவக்கம் ரஞ்சனி - காயத்ரிக்கு விருது
ADDED : டிச 14, 2024 01:11 AM

சென்னை:தி.நகர், கிருஷ்ண கான சபாவில் 68வது மார்கழி விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. இதை 'அப்பல்லோ' மருத்துவமனை குழும துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கர்நாடக இசை உலகின் இரட்டையர்களான ரஞ்சனி -- காயத்ரி சகோதரியருக்கு, 'சங்கீத சூடாமணி' விருதும், பரதநாட்டிய கலைஞர் கீதாசந்திரனுக்கு 'நிருத்யா சூடாமணி' விருதையும் வழங்கி கவுரவித்தார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு, சபாவின் தலைவர் நல்லி குப்புசாமி வரவேற்று, நினைவு பரிசுகளை வழங்கினார்.
பிரீத்தா ரெட்டி பேசுகையில், ''இந்த மார்கழி சீசனில், உலகின் தலைசிறந்த பாரம்பரிய கலைத்துறையினரை, சென்னை சபாக்களில் காணலாம். இசை, நாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளுடன் பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டு, ரசிகர்கள் ருசிக்கும் வகையில் அமைவது, சென்னையில் தான் அமையும்.
''மருத்துவர் அறுவை சிகிச்சையில் ஈடுபடுவதும், ஒரு கலைஞர் கலையை நிகழ்த்துவதும் ஒன்றுதான். இருவரும், கவனமாகவும், ஒருமித்த மனநிலையிலும் ஈடுபட்டால்தான், அதன் பலன் பிறரை அடையும்,'' என்றார்.
நல்லி குப்புசாமி பேசுகையில், 'சமஸ்கிருதம், மராட்டி மற்றும் குஜராத்தி மொழிகளில் கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை, ரஞ்சனி - காயத்ரி சிறப்பாக பாடுபவர்கள். கீதாசந்திரன் டில்லியைச் சேர்ந்தவர். பரதநாட்டியம், கர்நாடக இசை, தொலைக்காட்சி நாடகம் பல்வேறு கலைத்துறைகளில் பணியாற்றி வருபவர்,'' என்றார்.