ADDED : அக் 12, 2025 03:26 AM

நாகர்கோவில்: குளச்சல் அருகே கடல் தகவல் சேவை மைய கருவியை, நடுக்கடலில் மீனவர்கள் மீட்டனர்.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம், ஐதராபாதில் செயல்படுகிறது. கடல் அலைகளின் உயரம், கடல் நீரோட்டம், கடல் மேல் மட்ட வெப்பநிலை ஆகியவற்றை கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை அனுப்பும் பணியை இது செய்கிறது.
இதற்காக போயா எனப்படும் மிதவை கருவி, கடலில் மிதக்க விடப்படுகிறது. இதில், செயற்கை கோள் இணைப்புடன் ஜி.பி.எஸ்., வெதர் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு, எளிதில் சேதமடையாத துணி சுற்றப்பட்டிருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடலில் சென்னை பூம்புகாரில் இயங்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இந்த கருவி கடலில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்களுக்கு கடல் தகவல் சேவை அளிக்கப்படுகிறது.
குளச்சலை சேர்ந்த ஜெயசீலன், விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, டிரிப்பிட்டர் கருவி, கடலில் மிதந்து வந்து படகில் மோதியது. ஜெயசீலன் அதை மீட்டு, படகில் கொண்டு வந்து, நேற்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சேர்த்தார்.
இதுகுறித்து, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் திட்ட அலுவலர் முபாரக், கருவியை பார்வையிட்டார். பின் கருவி, மின்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.