ADDED : ஏப் 03, 2025 10:08 PM
சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில், கொள்கை பரப்பு செயலர் பதவியில் இருந்து, மருது அழகுராஜ் விலகிய நிலையில், புதிதாக கண்ணன் ஜி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை துவக்கி நடத்தி வருகிறார். அவருடன் இருந்த, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி போன்றோர் ஏற்கனவே விலகி விட்டனர். இந்நிலையில், அவரது அணியின் கொள்கை பரப்பு செயலராக இருந்த, அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜும் விலகி உள்ளார்.
அதைத் தொடர்ந்து, புதிய கொள்கை பரப்பு செயலராக, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பன்னீர்செல்வத்தின் உறவினர். ஏற்கனவே செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, கொள்கை பரப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

