மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி பொலிட்பீரோ உறுப்பினர்களும் தேர்வு
மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி பொலிட்பீரோ உறுப்பினர்களும் தேர்வு
ADDED : ஏப் 07, 2025 04:51 AM

மதுரை : மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நிறைவு நாளில் 6வது தேசிய பொதுச் செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ., பேபி 71, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
இக்கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2 ல் துவங்கி 6 நாட்களாக நடந்தது. நிறைவு நாளான நேற்று மதுரை பாண்டிகோயில் அருகே தொண்டர்கள் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். அரசியல் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், மதுரை எம்.பி., வெங்கடேசன் பங்கேற்றனர்.
இதில் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவிக்கு எம்.ஏ.பேபியின் பெயரை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் முன்மொழிந்தார். இதையடுத்து பினராயி விஜயன் அறிவித்தார். கேரள மாநிலம் கொல்லம் பிரக்குளத்தை சேர்ந்த பேபி, கட்சியின் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றி, 32 வயதில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.
2006 ல் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். 2006 - 2011 வரை கல்வி அமைச்சராக பதவி வகித்தார். இ.எம்.எஸ்., நம்பூதிரிபாடுக்கு அடுத்து கேரளாவில் இருந்து தேர்வான 2 வது பொதுச் செயலாளர் ஆவார்.
பினராயி விஜயன், பி.வி.ராகவுலு, எம்.ஏ.பேபி, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்.டி.சலீம், விஜயராகவன், அசோக் தவாலே, ராமச்சந்திரா டோம், எம்.வி.கோவிந்தன், அம்ரா ராம், விஜூ கிருஷ்ணன், மரியம் தவாலே, உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன், ஜிதேந்திர சவுத்ரி, ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, அருண்குமார் ஆகிய 18 பேர் பொலிட்பீரோ உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய தேசிய பொதுச் செயலாளருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

