மழை வெள்ள பாதிப்புக்கு அரசு நிவாரணம் மிகக்குறைவு மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
மழை வெள்ள பாதிப்புக்கு அரசு நிவாரணம் மிகக்குறைவு மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 03, 2025 01:30 AM

சென்னை:மழை, வெள்ள பாதிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு, தமிழக அரசின் நிவாரணம் மிகவும் குறைவாக உள்ளதாக, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நாகை மாலி குற்றம்சாட்டினார்.
சட்டசபையில் , அவர் பேசியதாவது:
விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல குளறுபடிகளை செய்கின்றன.
எனவே, பயிர் காப்பீடுத் திட்டத்தை, அரசே செயல்படுத்த வேண்டும். கொள்முதல் செய்வதற்கான நெல்லின் ஈரப்பதத்தை, 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு, தமிழக அரசு அளிக்கும் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தொகை இது. வருங்காலத்தில் பாதிப்புக்கேற்ப நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
விவசாய நிலங்களை குடியிருப்பு மனைகளாக மாற்றுவதை தடுக்க வேண்டும். விவசாய நிலங்கள், விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி வெகுவாக குறைந்து விட்டது; விலையும் சரிந்து விட்டது. மரவள்ளி கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்க, ரேஷனில் ஜவ்வரிசி விற்பனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் குறைந்து விட்டது. 23 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியான தமிழகத்தில், இப்போது 5 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகிறது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

