கொடிக் கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் மேல்முறையீடு; கூடுதல் நீதிபதிகள் அமர்விற்கு மாற்றம்
கொடிக் கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் மேல்முறையீடு; கூடுதல் நீதிபதிகள் அமர்விற்கு மாற்றம்
ADDED : ஜூன் 27, 2025 06:35 AM

மதுரை: மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு.
மதுரை அ.தி.மு.க.,நிர்வாகி கதிரவன்,'பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு அ.தி.மு.க.,கொடிக் கம்பம் நட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார். இதுபோல் மேலும் சில மனுக்கள் தாக்கலாகின.
ஜன.27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு: அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் அம்மாவாசிதேவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதை மார்ச் 6 ல் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இதை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மனு தாக்கல் செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இரு மனுக்களும் நிலுவையில் உள்ளன.சண்முகம்,'மதுரை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,' என மற்றொரு மனு செய்தார்.
ஜூன் 20 ல் நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு: இதுபோன்ற மனுக்களை ஏற்கனவே தனி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அதை மாற்றியமைக்க முடியாது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல், அவர்களின் தரப்பு கருத்துக்களை கோராமல் தனிநீதிபதி இளந்திரையன் பொதுவாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இது இயற்கை நீதிக்கு புறம்பானது.
அவரது உத்தரவை எதிர்த்து தாக்கலான வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இவ்வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடிவெடுக்கும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர்.