நீடிக்கும் தகுதி துளியும் இல்லை; கவர்னருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
நீடிக்கும் தகுதி துளியும் இல்லை; கவர்னருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
ADDED : ஏப் 15, 2025 01:52 AM
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் அறிக்கை:
கவர்னர் ரவியின் அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தன் உரையின் முடிவில், 'ஜெய் ஸ்ரீராம்' என, மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்ப்பந்தித்துள்ளார்.
உயர் கல்வி நிலையங்களை, அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, ஹிந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ரவியின் போக்கை கண்டிக்கிறோம்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட, 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என, உச்ச நீதிமன்றம் ஓங்கி குட்டியுள்ளது.
வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை, காவிக் கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக்கொள்ள முடியாது.
கவர்னர் என்ற உயர் பொறுப்பில் நீடிக்கும் தகுதி, சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.