சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ்; மார்க்சிஸ்ட் கண்டனம்
சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ்; மார்க்சிஸ்ட் கண்டனம்
ADDED : பிப் 15, 2025 08:09 PM

சென்னை: மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக்கேட்ட கல்லுாரி மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை:
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் வடக்கு தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கத்துரை ,மூவேந்தன் ஆகியோர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பெரம்பூர் காவல்நிலைம் மற்றும் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவிற்கு புகார்கள் அளித்துள்ளனர்.
புகார் கொடுப்பவர்களை மிரட்டி வழக்கு போட்டு, கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக பெரம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் கள்ளச்சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்ட இரண்டு கல்லுாரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை கள்ளச்சாரய வியாபாரிகள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
சமூக விரோத சக்திகளின் இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.இந்த படுகொலையில் ஈடுபட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் சார்பில் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளச்சாரய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்த பெரம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர், மதுவிலக்கு பிரிவினர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.இவ்வாறு சண்முகம் அறிக்கையில் கூறியுள்ளார்.

