அதிகாரிகள் உடந்தையுடன் கனிம வளங்கள் எடுப்பதில் விதி மீறல்; மார்க்சிஸ்ட் மாநில செயலர் குற்றச்சாட்டு
அதிகாரிகள் உடந்தையுடன் கனிம வளங்கள் எடுப்பதில் விதி மீறல்; மார்க்சிஸ்ட் மாநில செயலர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 27, 2025 11:49 PM

ஸ்ரீவில்லிபுத்துார் : ''தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் உடந்தையுடன் கனிம வளங்கள் எடுப்பதில் விதிமீறல் நடந்து வருகிறது'' என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் குற்றம் சாட்டினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அச்சம் தவிர்த்தான் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை நேற்று காலை சந்திந்து பேசிய சண்முகம் பின்னர் கூறியதாவது: இங்கு கல்குவாரியால் விவசாயிகள், கால்நடைகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இயற்கை வளங்கள், கனிம வளங்கள் சட்ட விரோதமாக, அனுமதி பெற்றதற்கு மாறாக மிக கூடுதலாக ஆழமான அளவில் எடுப்பது, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் அவற்றை எடுப்பது போன்ற விதிமீறல்கள் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருப்பது கண்டனத்துக்குரியது.
பட்டாசு தொழிலில் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகப்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காத பட்டாசு ஆலை உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பொது இடங்களில் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றங்களின் முந்தைய உத்தரவுகள் மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மற்றும் மேல்முறையீடு என 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இக்கொடிக்கம்பங்களை அகற்றுவது என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயல்.
நீதிமன்றத்தில் முடிவு வரும் வரை அப்புறப்படுத்தக் கூடாது. ஜம்மு காஷ்மீடர் பஹல்காமில் தீவிரவாதிகள் ஒரு மாதம் தங்கி இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமத்திய அரசின் பாதுகாப்புதுறை, உளவுத் துறை தோல்வியாகும். 26 பேர் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா வே பொறுப்பு என்றார்.

