'சேடிஸ்ட்' மனநிலையில் தி.மு.க., அரசு மார்க்சிஸ்ட் தொழிற்சங்கம் விமர்சனம்
'சேடிஸ்ட்' மனநிலையில் தி.மு.க., அரசு மார்க்சிஸ்ட் தொழிற்சங்கம் விமர்சனம்
ADDED : டிச 22, 2024 02:49 AM
சென்னை:போக்குவரத்து ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வு விவகாரத்தில், 'சேடிஸ்ட்' மனநிலையில் தி.மு.க., அரசு இருப்பதாக, சி.ஐ.டி.யு., கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியுள்ளதாவது:
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கக் கூடாது என, 2019ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. அ.தி.மு.க., அரசு செய்த தவறுகளை சரி செய்வதாக வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, அ.தி.மு.க.,வின் அரசாணையை அப்படியே அமலாக்கியது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அகவிலைப்படி உயர்வு வழங்க, நீதிமன்றங்கள் உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் வரை தொடர்ச்சியாக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து வருகிறது.
இந்த அனைத்து வழக்குகளும் தோற்கும் என்பது அதிகாரிகளுக்கு தெரியும். எனினும், அரசு பணத்தை வீணடித்து, வயதான போக்குவரத்து ஊழியர்களை கொடுமைக்கு உள்ளாக்குகின்றனர். இது கொடூரமான நடவடிக்கை; 'சேடிஸ்ட்' மனோநிலை.
எங்களை எதிர்த்து ஜெயிப்பதா; நாங்கள் இழுத்தடிக்கிறோம் பாருங்கள் என்ற அதிகாரவர்க்கத் திமிர்த்தனம். இதை விட ஒரு கேவலமான நடவடிக்கையை, தமிழக அரசு மேற்கொள்ள முடியாது.
எல்லாரையும் போன்று, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்குங்கள். இல்லாவிட்டால், அரசுக்கு அவப்பெயர் வந்து சேரும். நீண்ட கால பழிச் சொல்லுக்கு தி.மு.க., உள்ளாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.