கணிதம், விலங்கியல் தேர்வு 'ஈசி' அதிகம் பேர் 'சென்டம்' பெற வாய்ப்பு
கணிதம், விலங்கியல் தேர்வு 'ஈசி' அதிகம் பேர் 'சென்டம்' பெற வாய்ப்பு
ADDED : மார் 19, 2024 11:22 PM
சென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று கணிதம், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கும், பொருளியல், வேளாண் அறிவியல், மைக்ரோ பயாலஜி உள்பட ஒன்பது பாடங்களுக்கு தேர்வு நடந்தது.
இதில், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கியமான கணிதம் பாடத்திலும், மருத்துவ மாணவர்களுக்கு முக்கியமான விலங்கியல் பாடத்திலும், வினாத்தாள் எப்படி இருக்குமோ என,மாணவர்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்றைய கணித தேர்வில் வினாக்கள், அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் இருந்தது. நன்றாக தேர்வுக்கு தயாரான மாணவர்களால், 'சென்டம்' என்ற, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விலங்கியல் பாடத்தில் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள், விடை எழுத கடினமானதாக இருந்தது. ஆனால், இந்த முறை எளிதாக இருந்ததாக, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
கணித தேர்வில், சென்டம் அல்லது 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இதனால், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கட் ஆப் மதிப்பெண் அதிகரிப்பதுடன், அதிக மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்று, இடங்களை தேர்வு செய்வதில் போட்டி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

