'நான் உங்களுக்கு உதவலாமா' சுகாதார நிலையங்களில் புதிய மையம்
'நான் உங்களுக்கு உதவலாமா' சுகாதார நிலையங்களில் புதிய மையம்
ADDED : அக் 13, 2024 06:37 AM
சென்னை: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 'நான் உங்களுக்கு உதவலாமா' என்ற பெயரில், வரவேற்பு மையம் துவங்க, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்கள் என, 13,527 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவை, கர்ப்ப கால முன்கவனிப்பு, பிரசவம், தொற்று நோய்கள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
பிறவிக் குறைபாடு, ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி மற்றும் மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் வழிகாட்ட, அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில், வரவேற்பு மையம் அமைத்து, 'நான் உங்களுக்கு உதவலாமா' என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இது, அனைவருக்கும் தெரியும்படியாக இருப்பதுடன், வழிகாட்டுனரையும் நியமிக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அனைத்து சுகாதார அலுவலர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
'நான் உங்களுக்கு உதவலாமா' என்ற வரவேற்பு மையத்தில் நியமிக்கப்படுபவர், நோயாளிகளின் நிலையை அறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுனராக இருக்க வேண்டும். மேலும், நோயாளிகளுடன் அக்கறையுடனும், நட்புடனும் பழகக்கூடியவராகவும் இருத்தல் அவசியம்.
காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்டவை இருப்பதுடன், நோயாளிகள் அமருவதற்கான வசதி, 'வீல் சேர்' ஆகியவற்றுடன், சாய்வுதள வசதியும் இருப்பது முக்கியம்.
நோயாளிகளுக்கு குறை இருந்தால், அதை தெரிவிப்பதற்கான, புகார் பெட்டிகள் வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.