மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கையை ஆராய குழு மேயர் இக்பால் சிங் அறிவிப்பு
மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கையை ஆராய குழு மேயர் இக்பால் சிங் அறிவிப்பு
ADDED : அக் 14, 2025 11:44 PM

புதுடில்லி:“சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வேலை நிறுத்தம் செய்யும் டில்லி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்,” என, மேயர் ராஜா இக்பால் சிங் அறிவித்தார்.
டில்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அங்குஷ் நரங் தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் சபையின் நடுப்பகுதிக்கு வந்து ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது மேயர் ராஜா இக்பால் சிங், “வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கோரிக்கைகளை குறித்து ஆய்வு செய்ய என் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்,” என சபையில் அறிவித்து, சபையை ஒத்திவைத்து விட்டு புறப்பட்டார்.
இதுகுறித்து, அங்குஷ் நரங் கூறியதாவது:
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பினால் மேயர் எழுந்து ஓடி விட்டார். இப்போது யாரிடம் கேள்வி கேட்பது? மக்களின் கோரிக்கைகளை மட்டும் அல்ல, மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மேயருக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள், 16வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்களுக்கு இணையாக வேலை செய்தும், மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டி போராடி வருகின்றனர்.