கோவை காங்கிரசில் கோஷ்டிப்பூசல் செல்வப்பெருந்தகை மீது மயூரா கோஷ்டி புகார்
கோவை காங்கிரசில் கோஷ்டிப்பூசல் செல்வப்பெருந்தகை மீது மயூரா கோஷ்டி புகார்
ADDED : அக் 17, 2024 10:03 PM
தமிழக காங்கிரசை வலுப்படுத்த மாவட்ட வாரியாக, 'காங்கிரசை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் அரங்க கூட்டங்கள் நடத்த, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். முதல் கூட்டம், வரும் 20ல், கோவை புலியகுளத்தில் நடக்க உள்ளது.
இந்த கூட்டம் நடத்தப்படுவது பற்றி, கோவை மாநகர் மாவட்ட தலைவரும், அகில இந்திய செயலருமான மயூரா ஜெயகுமார் ஆதரவாளருமான கருப்பசாமிக்கு சொல்லப்படவில்லை. இதையடுத்து, இக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மேலிடத்தில், மயூரா கோஷ்டியினர் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தமிழக காங்., தலைவராக இருந்த அழகிரி, தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றும் முன், தலைவர் பதவிக்கான பட்டியலில் மயூரா ஜெயகுமார் பெயர் முதல் இடத்தில் இருந்தது. ஆனால், செல்வப்பெருந்தகை தலைவராக அறிவிக்கப்பட்டார். அப்போதிருந்து, செல்வப்பெருந்தகைக்கு எதிராக, மயூரா ஜெயகுமாரும், அவரது ஆதரவாளர்களும் செயல்படுகின்றனர்.
கோவை மாநகர் மாவட்ட தலைவர் கருப்பசாமி, மயூரா ஆதரவாளர். அவரை மாற்றி விட்டு, அப்பதவியை கைப்பற்ற, செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.
அவர்கள் ஏற்பாட்டில் தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அதனால் தான் மயூரா ஆதரவாளரகள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. அக்கூட்டம் நடந்து விட்டால், கோவை மாவட்டத்தில் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் கை ஓங்கிவிடும்.
எனவே, கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாருக்கு, மயூரா ஆதரவாளர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
இருந்தபோதும், எப்படியும் கூட்டத்தை நடத்தி, மயூரா கோஷ்டியினரின் செல்வாக்கை உடைக்கும் தீவிரத்தில் செல்வப்பெருந்தகை கோஷ்டியினர் உறுதியாக உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -