வடகலை, தென்கலை பிரச்னைக்கு மத்தியஸ்தர் நியமனம்: மோதல் வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
வடகலை, தென்கலை பிரச்னைக்கு மத்தியஸ்தர் நியமனம்: மோதல் வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
ADDED : ஜன 29, 2026 06:19 AM

- டில்லி சிறப்பு நிருபர் -
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில், பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை மத்தியஸ்தராக நியமித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவேங்கடம் தலங்களுக்கு அடுத்ததாக காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக திகழ்கிறது.
இக்கோவிலுக்குள் பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே நீண்டகாலமாக பிரச்னை நீடித்து வருகிறது.
தென்கலை பிரிவு சார்பில் தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வு, வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாட, தென்கலை பிரிவினருக்கு என்று தனிப்பட்ட உரிமை வழங்கி 1915, 1963ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டியது.
மேல்முறையீடு
மேலும், வடகலை பிரிவினரையும் பிரபந்தம் பாட அனுமதித்து, கடந்த 2022ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பிரபந்தம் பாடுவதில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, இரு தரப்புக்கும் இடையே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை மத்தியஸ்தராக நியமிக்கிறோம்.
சட்டம் - ஒழுங்கு நீதிபதி கவுல் தனக்கு உதவியாக தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர்கள், கோவில் சடங்கு மற்றும் வரலாறுகளை நன்கு அறிந்தவர்களில் இருவரை தனது குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரபந்தம் பாடும் பிரச்னை ராமானுஜரின் சீடர்களுக்கு இடையே மத மோதலாக மாறிவிடக் கூடாது. பகைமையை விட, சகோதரத்துவமே முக்கியம். மத்தியஸ்தம் முடியும் வரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
கோவிலுக்குள் போலீசாரை அனுமதிக்கக் கூடாது. போலீசாரின் தலையீடு ஏற்கத்தக்கது அல்ல. அமைதியை காப்பதற்கு பதில், அது நிலைமையை மோசமாக்கிவிடும்.
மத்தியஸ்தம் நடக்கும்போது எந்தப் பிரிவினரும் சட்டம் - ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது.
சமரசம் ஏற்பட்டாலோ, மாநில அரசின் தலையீடு அவசியம் என்றாலோ, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இரு தரப்பினரும் கொண்டு வரலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

