புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று மருத்துவ முகாம்
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று மருத்துவ முகாம்
ADDED : டிச 01, 2024 03:45 AM

சென்னை: 'பெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில், இன்று மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
'பெஞ்சல்' புயல் பாதித்த, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில், 500 மருத்துவ முகாம்கள், இன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடத்தப்படும்.
சென்னை மாநகராட்சியில் மட்டும், 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். மற்ற மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப, முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
முகாம்களில், காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற, அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படும்.
இதற்கான மருந்துகள் மற்றும் ஓ.ஆர்.எஸ்., கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்றவற்றை, தேவைக்கு அதிகமாக வைத்திருக்க, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்படும் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.