ADDED : மே 22, 2025 01:48 AM
சென்னை:முதுநிலை படிப்புகளை பயிற்றுவிக்கும் மருத்துவக் கல்லுாரிகள், தங்களது பேராசிரியர்களின் வருகை பதிவு உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க, தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, என்.எம்.சி., செயலர் ராகவ் லங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், முதுநிலை மருத்துவ படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லுாரிகள், தங்களது ஆண்டு அறிக்கையை என்.எம்.சி., தளத்தில் பதிவேற்றுவது கட்டாயம்.
அதன்படி, 2024 ஜன., 1 முதல் டிச., 31 வரையிலான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், என்.எம்.சி.,க்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்த வேண்டும். ஆண்டறிக்கைக்கான இணைய படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களுக்கு, உரிய விபரங்களை அளிக்க வேண்டும்.
குறிப்பாக, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆய்வு நடவடிக்கைகள், பேராசிரியர் மற்றும் முதுநிலை டாக்டர்கள் விபரங்கள், அவர்களது வருகை பதிவு உள்ளிட்ட தகவல்களை, ஜூன் 3க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.