சென்னையில் மருத்துவ மாநாடு வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பு
சென்னையில் மருத்துவ மாநாடு வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 13, 2024 07:46 PM
சென்னை:சென்னையில் நடக்கும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில், பல்துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை கிண்டி வர்த்தக மையத்தில், வரும் 19, 20, 21ம் தேதிகளில், மருத்துவத்தின் எதிர்காலம் குறித்த பன்னாட்டு மருத்துவ மாநாடு நடக்க உள்ளது. பல நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், மருத்துவ துறை நிபுணர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாநாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், மருத்துவ பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக அரசும், மருத்துவ பல்கலையும் இணைந்து நடத்தும் மாநாட்டை திறம்பட நடத்தும் பொருட்டு, பல்துறைகளை கொண்ட 20க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பன்னாட்டு அளவில் நடக்கும் மாநாட்டிற்கான கையேட்டை, அமைச்சர் சுப்பிரமணியன், வரும் 17ம் தேதி வெளியிட உள்ளார்.
மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில், புகழ்மிக்க மருத்துவர்கள், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

