ADDED : ஆக 31, 2025 06:29 AM
திருநெல்வேலி:தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மருத்துவத்துறையில், இணை இயக்குநர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேறு பணியாளர்கள் நியமிக்கப்படாததால் எந்த பணிகளும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், செங்கல்பட்டு ஆகிய ஐந்து புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.
இதனால் திருநெல்வேலி, வேலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவத்துறை மற்றும் ஊரகப் பணி இணை இயக்குநர் பணியிடங்கள் காலியானது.
இதையடுத்து, 2021 -- 2022 தமிழக அரசின் பட்ஜெட்டில், 'ஒவ்வொரு மாவட்ட இணை இயக்குநர் அலுவலகமும், 1.11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். அங்கு நிர்வாக அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர்கள், மூன்று உதவியாளர்கள், டைப்பிஸ்ட்கள், டிரைவர்கள் நியமிக்கப்படுவர்' என அறிவிக்கப்பட்டது.
ஆனால் நான்கரை ஆண்டுகளில் இந்த ஆறு மாவட்டங்களில் இணை இயக்குநர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். வேறு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பட்ஜெட்டில் அறிவித்தபடி 1.11 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களும் கட்டப்படவில்லை.
மற்ற மாவட்டங்களில் இருந்து அங்கு தற்காலிக பணியாளர்கள் பெயரளவுக்கு பணியாற்றுகின்றனர். இதனால் ஆறு மாவட்டங்களிலும் சுகாதார மற்றும் ஊரக பணிகள், ஆய்வுப் பணிகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மருத்துவ பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

