ADDED : டிச 17, 2024 10:13 PM
சென்னை:திருச்சியில் நாக்கை பிளந்து, 'டாட்டூ' வரைந்த விவகாரத்தில், மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து, மருத்துவ ஊரக நல பணிகள் துறை இயக்குனர் தலைமையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர், 'டாட்டூ' மையம் நடத்தி, அங்கு வருபவர்களுக்கு நாக்கை பிளந்து, 'டாட்டூ' வரைந்து வருவதாக கூறப்படும் புகாரில், ஹரிஹரன் மற்றும் அங்கு பணியாற்றிய ஜெயராமன் ஆகியோரை, திருச்சி போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில், எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை, சட்ட விரோதமாக ஹரிஹரன், மருத்துவ சாதனங்களை பயன்படுத்தி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இதுபோன்ற செயல்களில் தவறு நடந்தால், கிருமி தொற்று, ரத்தப்போக்கு ஏற்பட்டு ஆபத்தாக முடியும். மேலும், மருத்துவம் படித்தவர்கள் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகளை இந்த மையத்தினர் செய்துள்ளனர்.
அவர்கள் மீது, பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவித்தல், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, பயிற்சி பெறாமல் மருத்துவம் பார்த்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மயக்க மருந்து உள்ளிட்டவை எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதில், விதிமீறலில் ஈடுபட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பவம் குறித்து, மாவட்ட இணை இயக்குனரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.