மருத்துவ கழிவு வாகனங்களை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
மருத்துவ கழிவு வாகனங்களை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
ADDED : பிப் 04, 2025 05:59 AM

மதுரை: கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த வாகனத்தை விடுவிக்க தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
கேரளாவை சேர்ந்தவர் ஷிபு. இவர் கடந்த 2023ல் கேரளாவிலிருந்து வாகனத்தில் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்ததாக கன்னியாகுமரி மாவட்டம் அருமனை போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி ஷிபு தாக்கல் செய்த மனுவை நாகர்கோவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி:
கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, அரசு தரப்பின் பதில் திருப்திகரமாக இல்லை.
எல்லையோர சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எடுத்துள்ள நடவடிக்கையை அங்கீகரிக்கும் அதே வேளையில், இவ்வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் எதுவும் இதுவரை ஜப்தி செய்யப்படாததை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.
பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் திடக்கழிவு வாகனங்களை பறிமுதல் மற்றும் ஜப்தி செய்ய வேண்டும்.
அவற்றை சென்னை பெருநகரமாக இருந்தால், சம்பந்தப்பட்ட மண்டல கண்காணிப்பு பொறியாளர், மாநகராட்சி எனில் கமிஷனர், நகராட்சியாக இருந்தால் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், பேரூராட்சி எனில் பேரூராட்சி உதவி இயக்குநரிடம் அந்த வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்.
வழக்கு பதிந்து, விசாரணையை தொடர்வது மட்டும் போதாது. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டும். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

