ADDED : ஜன 23, 2026 02:52 AM
சென்னை: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், நேற்று இரண்டாம் நாளாக, சாலையோரம் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட, மருத்துவ பணியாளர்களை, போலீசார் கைது செய்து, மாலை விடுவித்தனர். நேற்று இரண்டாம் நாளாக, சேப்பாக்கம் வாலாஜா சாலையில், 500க்கும் மேற்பட்டோர், சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, அமைச்சரிடம் பேச்சு நடத்த, சங்க நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர். அவர்களும் ஆர்வமுடன், தலைமை செயலகம் சென்றனர்.
ஆனால், அமைச்சர் இல்லை எனக் கூறி, உதவியாளரிடம் பேசும்படி, போலீசார் கூறியதால், அதிருப்தி அடைந்த பணியாளர்கள், பேச்சு நடத்தாமல் திரும்பினர். அமைச்சர் பேசி தீர்வு காணும் வரை, போராட்டம் தொடரும் என, மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

