இதயம், சிறுநீரக நோய் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை
இதயம், சிறுநீரக நோய் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை
ADDED : செப் 26, 2024 02:11 AM
இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட நோய்களுக்கான, 'அட்டோர்வாஸ்டாடின், நோடோசிஸ், டாம்சுலோசின்' உள்ளிட்ட மாத்திரைகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இருப்பதால், வெளி மருந்தகங்களில் வாங்கிக் கொள்ள நோயாளிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தட்டுப்பாடு
தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில், மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன.
தேவைப்படும்போது வெளிச் சந்தையில் கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பிரதான அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனைகளில், இதயம், சிறுநீரகவியல் உள்ளிட்ட நோயாளிகளுக்கான செரிமான பிரச்னை, கொழுப்பு பாதிப்புகளுக்கான மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, 'அட்டோர்வாஸ்டாடின், நோடோசிஸ், டாம்சுலோசின்' உள்ளிட்ட மாத்திரை, டாக்டர்கள் பரிந்துரை செய்தாலும், அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை.
வெளி மருந்தகங்களில் வாங்கி கொள்ள, மருந்தாளுனர்கள் நோயாளிகளை அறிவுறுத்துகின்றனர்.
இதுகுறித்து நோயாளிகள் கூறியதாவது:
சென்னையில் உள்ள அனைத்து பிரதான அரசு மருத்துவமனைகளிலும், சில வகை மருந்துகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.
500 மி.கி.,
இணை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்வோருக்கு, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் கிடைப்பதில்லை. ஒருசில மாத்திரைகள், ஒரு மாதத்திற்கு மேல் வரத்து இல்லை.
எனவே, வெளியே வாங்கி கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர். மேலும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில், சில மாத்திரைகள் இருப்பதில்லை.
குறிப்பாக, 250 மி.கி., அளவு எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்தால், 500 மி.கி., மாத்திரை கொடுகின்றனர். அவற்றை இரண்டாக உடைத்து சாப்பிட சொல்கின்றனர்.
சிறிய அளவிலான மாத்திரைகளை உடைக்க முடியாமல், சில நேரங்களில் முழுதாக சாப்பிடுகிறோம்.
எனவே, மருந்து, மாத்திரைகளை தேவைக்கு ஏற்ப மருத்துவமனைகளில் வாங்கி வைத்து கொள்வதுடன், டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவிலான மாத்திரைகளையே வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருத்துவ பணிகள் சேவை கழகத்தில், 'அட்டோர்வாஸ்டாடின்' மாத்திரைகள், 19 கோடி உள்ளன. மற்ற மாத்திரைகள், ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில், மருந்து, மாத்திரைகள் கையிருப்பு இல்லையென்றால், எங்களிடம் கேட்டு பெறலாம் அல்லது அவர்களே வெளி மார்க்கெட்டில் வாங்கி கொள்ளலாம்.
- அரவிந்த்,
மேலாண் இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம்
- நமது நிருபர் -