மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தயாரிப்பு இடமாற்றத்திற்கு தடை
மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தயாரிப்பு இடமாற்றத்திற்கு தடை
ADDED : மார் 06, 2024 01:08 AM
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், லட்டு பிரசாதம் தயாரிக்கும் மையத்தை இடமாற்றம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை ஆதீன மடத்தின் மேலாளர் சரவணன், 2023ல் தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி விதியில் திருஞானசம்பந்தர் மண்டபம் உள்ளது.
அதில், ஆதீனம் மடம் சார்பில் மாணவர்களுக்கு, சைவ சிந்தாந்த பாடல்கள், ஓதுவார்கள் வாயிலாக கற்பிக்கப்பட்டது.
மடத்தின், 291வது ஆதீனம் இருந்தவரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
தற்போது இந்த இடம் கோவில் சார்பில், லட்டு பிரசாதம் தயாரிப்பு மையமாக பயன்படுத்தப்படுகிறது. அங்கு மீண்டும் தேவார பாடசாலை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
கடந்த 2023 செப்டம்பரில் நீதிபதி எஸ். ஸ்ரீமதி: லட்டு பிரசாதம் தயாரிக்கும் மையத்தை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அங்கு, மதுரை ஆதீனம் மடம் சார்பில் தேவார பாடசாலை நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், 'மேற்கு ஆடி வீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் தேவார பாடசாலை நடக்கிறது. ஆதீனம் மடம் சார்பில் தேவார பாடசாலை நடந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை' என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஆதீனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

