'தினமும் மாலை 3:00 மணிக்கு மக்களை சந்தியுங்கள்!' நில அளவையாளர்களுக்கு 'கிடுக்கி'
'தினமும் மாலை 3:00 மணிக்கு மக்களை சந்தியுங்கள்!' நில அளவையாளர்களுக்கு 'கிடுக்கி'
ADDED : அக் 24, 2024 01:40 AM
சென்னை:பட்டா மாறுதல் தொடர்பான பணிகளை விரைவுப்படுத்த, தினமும் காலை மற்றும் மாலை, நில அளவையாளர்கள், தாலுகா அலுவலகத்துக்கு நேரில் வர உத்தரவிடப்பட்டு உள்ளது.
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், பத்திரப்பதிவு முடிந்ததும், பட்டா உட்பிரிவு, பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
புதிய சுற்றறிக்கை
இதற்காக, பொது மக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிலத்தை, நில அளவையாளர்கள் நேரில் சென்று, அளந்து கொடுக்க வேண்டும்.
நிலத்தை அளப்பது, தாசில்தார்களுக்கு அறிக்கை அளிப்பது போன்ற பணிகளில், அவர்கள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பான வழக்குகளில், நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டாலும், நில அளவையாளர்களின் தாமதம் தொடர்கிறது. இந்நிலையில், அரசு மற்றும் கலெக்டர்கள் உத்தரவு அடிப்படையில், நில அளவையாளர்களுக்கு, கலெக்டர்கள் புதிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
அனைத்து நில அளவையாளர்களும், தினமும் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு, காலை 10:00 மணிக்கு வர வேண்டும். அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னரே, வெளியில் செல்ல வேண்டும்.
களப்பணி தொடர்பான தகவல்களை, வட்ட துணை தாசில்தாருக்கு தெரிவித்த பின், களப் பணிக்கு செல்ல வேண்டும்.
பரிசீலனை
அனைத்து வேலை நாட்களிலும், மாலை 3:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை, தாலுகா அலுவலகத்தில், பொது மக்களை நேரில் சந்திக்க வேண்டும்.
இணைய வழி பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, வில்லங்க சான்று, சொத்து வரி ரசீது, உட்பிரிவு கட்டணம் செலுத்திய ரசீது போன்ற ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.
பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பரிசீலித்து, 15 நாட்களுக்குள் அடுத்த நிலை அலுவலருக்கு அனுப்ப வேண்டும். பெரும்பாலான அலுவலகங்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தெரிகிறது.
இதை தவிர்க்க, பரிசீலனையின்போது, விடுபட்ட ஆவணங்களை, மனுதாரரிடம் கேட்டு வாங்கி இணைத்து, அடுத்த நிலை அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாலை வரை, பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பரிசீலித்து, அடுத்த நிலை அலுவலருக்கு அனுப்பிய தகவல்களுடன், செவ்வாய்க் கிழமை நடக்கும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை அனைத்து நில அளவையாளர்களும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கடைப் பிடிக்க தவறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.