அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க மெகா கூட்டணி
அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க மெகா கூட்டணி
UPDATED : மே 03, 2025 12:08 AM
ADDED : மே 02, 2025 11:29 PM

சென்னை : அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க, மேலும் சில கட்சிகளை இழுத்து, 'மெகா' கூட்டணி அமைக்கும் பழனிசாமியின் திட்டத்தை ஆதரித்து, சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுவது என, கடந்த மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 25ல் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பதை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலை வகித்தார். வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், முனுசாமி, ஜெயகுமார், சீனிவாசன், உதயகுமார், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்:
தி.மு.க.,வை பொது எதிரியாக பாவிக்கும் மனநிலையில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் இருக்கவும், தீயசக்தி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கும், ராஜதந்திரத்தோடு வலுவான தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க., தலைமையில், மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இது, வெற்றிக் கூட்டணியாகத் திகழ, இச்செயற்குழு முழுமனதுடன் ஆதரித்து அங்கீகரிக்கிறது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, அ.தி.மு.க., தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் துவக்கமாக, பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டு வைத்துள்ளார்.
பொது எதிரியான தி.மு.க.,வை வீழ்த்த, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளை இடம்பெறச் செய்து, 'மெகா' கூட்டணி அமைப்பதற்கு, பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். அவருக்கு செயற்குழு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., -- பா.ஜ., -- த.மா.கா., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் வந்து விடும் என உறுதியாக நம்பும் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி அல்லது த.வெ.க.,வை கூட்டணிக்குள் இழுத்துவர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
சீமானிடம், பா.ஜ., தலைமையும் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பில் தான், மெகா கூட்டணி அமைப்போம் என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.