விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு
விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு
ADDED : அக் 10, 2024 01:42 AM

சென்னை:விருதுநகரில் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகளை துவக்க, 'மாஸ்டர் டெவலப்பராக' சிப்காட் நிறுவனத்தை நியமிக்க கோரி, மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து, தமிழக அரசு காத்திருக்கிறது.
தமிழகத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமர் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பூங்கா, விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், 1,052 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலத்தை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
திட்ட செலவு, 2,000 கோடி ரூபாய். அதில், 500 கோடி ரூபாய் மத்திய அரசின் மானியம்.
பூங்காவை விருதுநகரில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையில், 2023 மார்ச்சில் கையெழுத்தானது.
இதற்காக, இரு அரசுகளும் இணைந்து, 'பி.எம்.மெகா இண்டகிரேட்டட் டெக்ஸ்டைல் ரீஜியன்ஸ் அண்டு அப்பேரல் பார்க் தமிழகம்' என்ற சிறப்பு முகமை இந்தாண்டு பிப்., 20ல் ஏற்படுத்தப்பட்டது.
இந்த முகமையால், ஒப்பந்த நிறுவனம் பூங்கா அமைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணியை சிப்காட் மேற்கொள்ள மத்திய அரசிடம், தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விருதுநகரில் அமைய உள்ள மாபெரும் ஜவுளி பூங்காவால், நேரடி மற்றும் மறைமுகமாக, 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
பூங்காவை ஏற்படுத்தும், மாஸ்டர் டெவலப்பர் நிறுவனத்தை, 'டெண்டர்' கோரி தேர்வு செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சிப்காட், மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்களை உருவாக்கி வருகிறது.
எனவே, விருதுநகர் ஜவுளி பூங்காவுக்கு, மாஸ்டர் டெவலப்பராக சிப்காட்டை நியமிக்குமாறு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் கிடைக்கும் என, தெரிகிறது. அனுமதி கிடைத்ததும் பூங்கா அமைக்கும் பணிகளும், நிலம் ஒதுக்கீடும் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.