ADDED : ஆக 04, 2024 06:29 AM

மேட்டூர்: ''உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ, மேகதாது என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இது குறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் துாண்டுதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி, மாயனுார் தடுப்பணையை கட்டினார். பின் தடுப்பணைக்கு பதில் மோகனுார் உள்ளிட்ட இடங்களில் கதவணைகள் கட்டப்பட்டன.ஏரி, குளங்களை நிரப்ப, தற்போது நடவடிக்கை இல்லை. உபரி நீரை ஏரியில் நிரப்பும் திட்டத்தை கிடப்பில் போடவில்லை. அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஓரிரு மாதங்களில் செயல்படுத்தப்படும்.
கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் மேகதாது அணையை கட்ட விடவே மாட்டோம். மேட்டூர் உபரி நீரை பயன்படுத்தக்கூடாது என வழக்கு போட்டுவிட்டு, தற்போது உபரி நீர் வீணாவதாக கர்நாடக அரசுகூறுவதை ஏற்க முடியாது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ, மேகதாது என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இதுகுறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் துாண்டுதல் என சந்தேகம் ஏற்படுத்துகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி நீரை பயன்படுத்தி நீர் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, அந்த மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக, முதல்வரிடம் எடுத்துரைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.